டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து கடந்த மார்ச் 11ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணையை தொடந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த இடைக்கால ஜாமீன் நாளையுடன் (ஜூன்.2) நிறைவடையும் நிலையில், அவர் நாளை சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாரு உத்தரவிட்டனர்.
இதையடுத்து இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றாம் அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இடைக்கால ஜாமீனை நீடிக்கக் கோரும் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாகவும் அப்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கலாமே என்றும் வாதிடப்பட்டது.
மேலும் மருத்துவ பரிசோதனைக்கு ஒரு வார காலம் தேவைப்படாது என்றும் அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து பல்வேறு சிகிச்சை குறித்த சோதனை எடுக்க உள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு ஒரு வார காலம் கோருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஜூன் 5ஆம் தேதிக்கு அறிவிப்பதாக ஒத்திவைத்தனர். நாளை (ஜூன்.2) தீர்ப்பை வெளியிடுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் கோரப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் ஜூன் 5ஆம் தேதி தான் இறுதித் தீர்ப்பு வர உள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி நாளை (ஜூன்.2) திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரண்டைவார் என்று தெரிகிறது. இதனிடையே ஜூன் 4ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் நிறைவு! திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை! - PM Modi 45 Hour Meditation