டெல்லி சலோ போராட்டம் இரண்டு நாட்கள் நிறுத்தி வைப்பு; விவசாய சங்கத்தினர் கூறும் காரணம் என்ன..? - விவசாயிகள் போராட்டம் நிறுத்திவைப்பு
Delhi chalo Protest: விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, அரசு தரப்பில் தரப்பட்ட திட்டங்கள் குறித்து, இரண்டு நாட்கள் ஆலோசனை செய்த பிறகு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


By ANI
Published : Feb 19, 2024, 12:36 PM IST
சண்டிகர்: விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) அமல் படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் இடையேயான நான்காம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று (பிப்.18) சண்டிகரில் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களுடனான நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் (Punjab Kisan Mazdoor Sangharsh Committee) பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் (Sarvan Singh Pandher) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இன்று அல்லது நாளை இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். மேலும், எங்கள் மற்ற கோரிக்கைகள் குறித்து டெல்லி சென்ற பின்னர் ஆலோசனை மேற்கொள்வதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். அரசும், விவசாய சங்கங்களும் இணைந்து இந்த விவகாரத்திற்கு தீர்வுகாண முயற்சி செய்து வருகின்றனர். அதுவரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. முடிவுகள் அது பலனளிக்காத பட்சத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி 'டெல்லி சலோ' போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்ஜித் சிங் தலிவால் (Jagjit Singh Dallewal) கூறுகையில், அரசு தங்களிடம் இரண்டு அரசாங்க நிறுவனங்களால் மேற்பார்வையிட்டு, நிர்வாகிக்கப்படும் சில திட்டங்களை வழங்கியுள்ளது. அவை பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்கிறது.
அது குறித்து சங்கத்தினர் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எங்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் வரை டெல்லி சலோ போராட்டம் தொடரும். இன்னும் எங்கள் மற்ற கோரிக்கைகளை குறித்த பேச்சு வார்த்தையும் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாய சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் நேர்மையாகவும், நல்ல முறையில் நடந்ததாகவும் உறுதியளித்தார். மேலும் அரசு தரப்பில் வழங்கிய ஆலோசனைகள் குறித்து, விவசாய சங்கத்தினர் தங்களின் முடிவுகளை விரைவில் தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அரசால் ஊக்குவிக்கப்பட்ட தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஆகிய அமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தின் கீழ் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும்" என்று உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணையும் கமல்நாத்? தகுதி நீக்கம் செய்ய முடியாதா! சட்ட நிபுணர்கள் கூறும் சிக்கல்கள் என்ன?