சிகாகோ : இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் பரம்பரை வரி சட்டம் உள்ளதாகவும், ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டிய போது அவரது மறைவுக்கு பின் அவரால் முழு சொத்துகளையும் தனது வாரிசுகளுக்கு வழங்க முடியாது.
அவர் ஈட்டிய சொத்துகளில் 45 சதவீதத்தை மட்டும் தனது வாரிகளுக்கு வழங்க முடியும் மீதமுள்ள 55 சதவீத சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும் என்றார். இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். செல்வந்தர்கள் தங்களது தலைமுறையில் சம்பாதிக்கும் செல்வத்தில் பாதியை பொது மக்களுக்காக வழங்க வேண்டும்.
அதேநேரம் அனைத்தையும் வழங்காமல் பாதியைத் தான் வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது. இந்தியாவில் இது போன்ற சட்டங்கள் இல்லை. ஒருவர் தான் ஈட்டும் 10 பில்லியன் பணத்தை தனக்கு பின் தனது குழந்தைகள் மற்றும் வாரிசுகளுக்கு விட்டுச் செல்கிறார்.
அதனால் பொது மக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகள் பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும். சொத்துக்களை மறுபங்கீடு செய்வது பற்றி பேசுகையில், புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களை பற்றியு நாங்கள் தொடர்ந்து பேசுவதாகவும் அவை மக்களின் நலனுக்காக மட்டுமே தவிர பெரும் பணக்காரர்களின் நலனுக்காக அல்ல என்று சாம் பித்ரோடா கூறினார்.
சொத்துகள் மறுபங்கீடு என்பது கண்டிப்பாக கொள்கை பிரச்சினை என்றும், காங்கிரஸ் கட்சி ஒரு கொள்கையை உருவாக்கும், அதன் மூலம் சொத்துப் பங்கீடு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் என்ற நிலை இல்லை என்றும் நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால், ஏழைகளுக்கு இவ்வளவு பணம் என்று பகிர்ந்து அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொது மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை, சொத்து மறுபங்கீடு என்ற பெயரில் காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில், அதை மெய்யாக மாற்றுவது போல் சாம் பித்ரோடாவின் கருத்து அமைந்து உள்ளது.
சாம் பித்ரோடாவின் கருத்துக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸின் குடும்ப ஆலோசகர் உண்மைகளை உளறிக் கொட்டி இருக்கிறார். காங்கிரஸின் நோக்கம் மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சட்டப்பூர்வமாக கொள்ளையடிப்பது என்பது இதன் மூலம் தெரிய வந்து உள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் கூறுகையில், வாக்காளர்கள் இது போன்ற சொத்து பறிப்பாளர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். பூனை வெளியே வந்துவிட்டது. ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகர் பரம்பரி வரி சட்டம் அமல்படுத்துவது குறித்து பரிந்துரை செய்து இருப்பது நாட்டு மக்களின் சொத்துகளை சுரண்டுவதற்காக போடப்பட்ட வழித்திட்டமாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது நாமே நமது பணத்தை இழப்பதற்கும், சொத்து மற்றும் உடைமைகளை இழப்பதற்கு வழிவகுக்கும் திட்டமாகும். வாக்களார்கள் இதுபோன்ற சொத்து பறிப்பாளர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அதேநேரம் சாம் பித்ரோடாவின் பரம்பரை வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "சாம் பித்ரோடா இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏராளமான மற்றும் நீடித்த பங்களிப்புகளை செய்துள்ளார். அவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக உள்ளார். அவர் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்.
ஒரு ஜனநாயகத்தில், ஒரு நபர் தனது தனிப்பட்ட கருத்துக்களை பற்றி விவாதிக்கவும், வெளிப்படுத்தவும், சுதந்திரமாக செயல்படவும் முடியும். அதேநேரம் அவரின் கருத்துக்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அர்த்தம் இல்லை" என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : இவிஎம், விவிபாட் இயந்திர விவகாரம் - 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜர் - உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Lok Sabha Election 2024