புதுச்சேரி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளின் தலைமையிலும் தனித்தனியாக கூட்டணி அமைத்துள்ளது. அந்தவகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதனை அடுத்து, நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 57 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட மூன்றாவது பட்டியலை நேற்றிரவு, அக்கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வெளியானது.
அதில் அருணாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் இரண்டாவது முறையாக வி.வைத்தியலிங்கம் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வி.வைத்தியலிங்கம் 1950ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை வெங்கட சுப்பா ரெட்டி, புதுச்சேரி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இரண்டுமுறை புதுச்சேரி மாநில முதலமைச்சராகவும், ஒரு முறை புதுச்சேரி சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
தற்போது புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், மீண்டும் இந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. புதிய முகங்களை களமிறக்கிய ராமதாஸ்! - PMK Candidate List