தர்மசாலா: இமாச்சல பிரதேச அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழும் நிலையில் கேபினட் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்று உள்ளார்.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. பாஜகவுக்கு 25 உறுப்பினர்கள் 3 சுயேட்சைகளும் மாநிலத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று (பிப்.27) நடந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்த நிலையில், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் அரசில் ஏற்பட்ட அடுத்தடுத்த அதிருப்தி காரணமாக கேபினட் அமைச்சர் விக்ரமாதித்யா சிங் தனது ராஜினாமா முதலமைச்சர் சுக்விந்த சுக்குவிடம் வழங்கினார்.
இதனால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் சூழல் காணப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பூபேந்தர் சிங் ஹூடா, பூபேஷ் பாகெல், டி.கே. சிவக்குமார் தலைமையில் சிம்லாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து விக்ரமாதித்ய சிங் தனது முடிவில் இருந்து பின்வாங்கி ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பேசிய விக்ரமாதித்ய சிங், மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். கட்சியின் அதிக ஆர்வத்தையும் ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு, காலையில் நான் ராஜினாமா செய்ததை முதலமைச்சர் ஏற்க மறுத்துவிட்டார், அதை மேலும் வலியுறுத்த விரும்பவில்லை. மாநிலத்தில் எந்த ஆபத்தும் இல்லை" என்று தெரிவித்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் விர்பத்ர சிங்கின் மகனான விக்ரமாதித்ய சிங், முன்னதாக தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டதாகவும் இனி அனைத்தும் காங்கிரசின் உயர் மட்ட நீதிமன்றத்தின் கையில் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்கண்டில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து - 12 பயணிகள் பலி!