டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். அதன்படி இம்முறை ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்குகிறார்.
ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மே 3) நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி ரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் இருக்கும் நிலையில் கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அவர் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் இந்த தேர்தலில் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவார் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அங்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமேதியில் ராகுல்? ரேபரலியில் பிரியங்கா? காங்கிரஸ் அறிவிப்பு? பாஜகவில் யார்? - Lok Sabha Election 2024