டெல்லி : நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று (மார்ச்.11) மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் குடியுரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஏதுவாக புதிய வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
indiancitizenshiponline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களது குடியுரிமைக்கு விண்னப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விரைவில் CAA-2019 என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை குறிப்பிட்டு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014 ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறியவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய குடியுரிமை பெற 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் இந்தியாவில் இருக்க வேண்டும். 2014 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் ஏதாவது 6 ஆண்டுகள் மற்றும் கடந்த ஆண்டு முழுவதுமாக இந்தியாவில் இருந்ததற்கான ஆவணங்கள், முந்தைய நாட்டின் செயலிழந்த பாஸ்போர்ட், சொந்த நாட்டின் குடியுரிமையை கைவிட்டு இந்திய குடிமகனாக மாறுவதற்கான உறுதிமொழிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மதம் சார்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின், பெளத்தம், பாரசீகம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், 2019ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மக்கள் புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்க்காதது மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக புலம் பெயரும் மக்களுக்கு குடியுரிமை வழங்காததை குறித்து குறிப்பிடப்படாததால் தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தது.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (மார்ச்.11) அரசிதழில் வெளியானது.
இதையும் படிங்க : அரியானா முதலமைச்சராக நயப் சைனி தேர்வு! ஆட்சி நீடிக்குமா? காங்கிரசின் திட்டம் என்ன?