விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டிருப்பதாக மத்திய இரும்புத்துறை அமைச்சகம் ஆலை நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளது. வரும் கால செயல் திட்டத்தின்படி ஊழியர்கள் நலனுக்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக விசாகப்பட்டினத்தின் இரும்பு ஆலையில் உள்ள ஒரு உலை கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இரண்டாவது உலை கடந்த 12ஆம் தேதி மூடப்பட்டது. இப்போது இந்த ஆலையில் ஒரு உலை மட்டுமே இயங்கி வருகிறது. படிப்படியாக இரும்பு உலைகளை மூடி ஆலையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர அரசின் வேண்டுகோளுக்கு இணங்க விசாகப்பட்டினம் இரும்பு ஆலையை செயில் நிறுவனத்துடன் இணைத்து மிகப்பெரிய நிறுவனமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆலையை செயில் நிறுவனத்துடன் இணைப்பதால் இந்தியாவின் இரும்பு உற்பத்தி திறன் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன்களாக மாறும். தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் செயில் நிறுவனத்துடன் இணைப்பது பற்றி முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரிடையே ஆலோசனையும் நடைபெற்றது.
இதையும் படிங்க : விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார் மயமாக்குவதை ஏற்றுக்கொள்ளுமா தெலுங்கு பூமி?
ரூ.1.10 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்துடன் இந்த இணைப்பின் மூலம் செயில் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அடுத்த ஏழு ஆண்டுகளில் 20 மில்லியன் டன்களில் இருந்து 30 மில்லியன் டன்களாக உயரும். குறைந்த பட்ச முதலீட்டின் மூலம் அடுத்த நிதி ஆண்டில் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையின் உற்பத்தி திறன் 27.5 மில்லியன் டன்னை தொடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இருநிறுவனங்களையும் இணைப்பதற்காக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கூடுதல் முதலீடு செய்ய தேவையிருக்காது. இரு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ரூ.30,000 கோடி சேமிக்க முடியும். உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். ஒரு டன்னுக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை உற்பத்தி செலவும் குறையும். வரும் காலத்தில் கூடுதலாக 5 மில்லியன் டன் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கங்கள் நம்புகின்றன. கூடுதலாக 10,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும்.