கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்துவந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதனையொட்டி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனிடையே, சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து, போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்ற சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியது. இதன் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஐந்து மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனுக்கு ஒரு மருத்துவர் ஆஜரான நிலையில், ஒருவர் புறக்கணித்துள்ளார். அதேநேரம், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அவசரப்பிரிவினை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அந்த வகையில், வன்முறைச் சம்பவங்களை மேற்கொண்டதாக மாநிலம் முழுவதும் நேற்று வரை 9 போராட்டக்காரர்களை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, இன்று கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகத்தில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் சந்தீப் கோஷ் ஆஜரானதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இந்த வாரத்தின் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில், கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராகவும் அவர் பொறுப்பேற்றார்.
மேலும், பெண் மருத்துவரின் உடல் மருத்துவமனையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை முதல், சந்தீப் கோஷின் நடவடிக்கைகளை சிபிஐ ஆராய்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக முதலில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாகவே அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு வந்த பிறகு வெகுநேரம் கழித்தே பெண்ணின் சடலத்தை பார்க்க அனுமதித்ததாகவும் புகார்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன்.. பெற்றோரிடம் தீவிர விசாரணை!