அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று (மே.11) மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளான மினி லோடு ஆட்டோவில் இருந்து கட்டுக்கட்டாக 7 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அனந்தபள்ளி பகுதியில் விஜயவாடாவில் இருந்து விசாகபட்டினம் நோக்கி மினி லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், லோடு ஆட்டோவுக்கு பின்னால் வந்து வந்த மினி லாரி திடீரென எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் சாலையிலேயே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயம் அடைந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே லோடு ஆட்டோவை சோதனையிட்ட அப்பகுதி மக்கள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆட்டோவை ஆய்வு செய்து அதில் இருந்த 7 பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
அந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்த போலீசார் அதற்குள் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர். தேர்தல் பறக்கும் படையினர் அலுவலகத்தில் வைத்து பணத்தை எண்ணியதில் 7 கோடி ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
பணம் யாருடையது என தெரியவராத நிலையில் அது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கிலான ரூபாய் அடுத்தடுத்து பிடிபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை (மே.9) என்டிஆர் மாவட்டத்தில் டிரக் மூலம் கடத்தப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை போலீசார் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட 8 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியவராத நிலையில் அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "மோடி எனும் சர்வாதிகாரியிடம் இந்தியாவை பாதுகாக்க 140 கோடி மக்கள் ஆதரவு தேவை"- அரவிந்த் கெஜ்ரிவால்! - Arvind Kejriwal Interview