பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்த அதுல் சுபாஷ் (34) கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மனைவி மற்றும் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கொடுமை மற்றும் நீதிமன்றத்தில் நேர்ந்த அநீதி உள்ளிட்ட காரணங்களை அதுல் சுபாஷ் அவரது தற்கொலை கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
திருமண வாழ்க்கை
கடந்த 2019 ஆம் ஆண்டு நிகிதா சிங்கானியா என்பவரை அதுல் சுபாஷ் திருமணம் முடித்துள்ளார். இவர்களுக்கு 4 வயது மகனும் உள்ளார். இந்நிலையில், சுபாஷிடம் இருந்து விவாகரத்து கோரி, நிகிதா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், அவரது மகனைச் சந்திக்கக் கூட அதுல் சுபாஷை நிகிதா அனுமதிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அத்துடன், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில், அதுல் சுபாஷ் ஆஜரானபோது, '3 கோடி ரூபாய் கொடுங்கள், இல்லையெனில் செத்து விடுங்கள்' என்று அவரை நிகிதா கிண்டல் செய்திருக்கிறார். பொய்யான புகார் மற்றும் பெரும் தொகைக்கான கோரிக்கை மற்றும் நீதிமன்றம் காட்டிய பாரபட்சம் ஆகியவற்றால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அதுல் சுபாஷ், தற்கொலை செய்து கொண்டதாக அவரது வட்டாரம் கூறுகிறது. மேலும், அதுல் சுபாஷ் கடிதத்தில், '' துன்புறுத்தல் வழக்குகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றும் பாலின வேறுபாடின்றி நடுநிலையான சட்டங்கள் தேவை'' என்றும் எழுதப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
இந்த தற்கொலை விவகாரம் சோசியல் மீடியாவில் நாளுக்குநாள் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதுல் சுபாஷுக்கு நீதி வேண்டும் என அவரது சக ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பெங்களூரில் உள்ள ஈகோஸ்பேஸ் ஐடி பூங்காவிற்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், அதே ஐடி பூங்காவில் பணியாற்றி வரும் நிகிதாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், '' அதுல் சுபாஷின் கதை ஒரு மனிதனைப் பற்றியது மட்டுமல்ல. இது இங்குள்ள சிஸ்டத்திற்கான தோல்விகளைப் பற்றியது. அதுல் சுபாஷுக்கு கிடைக்கும் நீதி என்பது, வெளியுலகில் கேட்கப்படாத எண்ணற்ற குரல்களுக்கான நீதி ஆகும். இதற்கு பொறுப்பானவர்களிடம் இருந்து முடிவு வராமல் நாங்கள் ஓயப்போவதில்லை. அதுலின் மரணமானது, துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை நாம் எவ்வாறு கையாள்வது என்பதில் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். அதுல் ஒரு கனிவான நபர். அவர் தனது மனைவி மற்றும் மாமியார் வீட்டு ஆட்களால் துன்புறுத்தலுக்கு ஆளானதால் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளார். நமது சட்ட அமைப்பில் பாலின சமத்துவம் மற்றும் நேர்மைக்கான ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். பல உயிர்கள் பலியாகும் முன், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், பெங்களூரு போலீசார் தலைமறைவாக உள்ள நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கண்டுபிடிக்க சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.