புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவி பஞ்சகாந்த தலைமை தாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கை, ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு பூசி மெழுக பார்க்கிறது. எனவே, மாணவி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்திய குடியுரிமைச் சட்டத்தை தற்போது அமல்படுத்திருக்கிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியின் மிருக பலத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். நான்காண்டு காலம் அமல்படுத்தவில்லை. தற்போது தேர்தல் வருகிறது. தேர்தல் சமயத்தில் நாங்கள் இந்துக்கள் பக்கம் இருக்கிறோம், சிறுபான்மையினருக்கு எதிர்ப்பு என்பதை காட்டுவதற்காக, அதனை அமல்படுத்தி இருக்கிறார்கள்.
மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், தெளிவாக இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு மற்றும் இறையான்மைக்கு எதிரானது, ஆகவே, இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், மோடி அரசு நான்காண்டு காலம் தூங்கி விட்டு, தற்போது இந்துக்களின் வாக்குகளை பெறலாம் என்பதற்காக நடைமுறைப்படுத்துகின்றனர். இது நன்றாக நாட்டு மக்களுக்குத் தெரியும். நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரங்கள் இனி மக்களிடம் எடுபடாது.
குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவது என்பது சிறுபான்மையினருக்கு எதிரானது. எனவே, காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாங்கள் அதை எதிர்க்கிறோம். குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசும், பாஜகவும் அமல்படுத்த நினைத்தால், அதை நாங்கள் எதிர்ப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “சூர்யமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி பதில்!