டெல்லி : பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2019 மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் அங்கு தோல்வி அடைந்தார். அதன் பின் நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே தலைமையில் விஜேந்தர் சிங் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக நடப்பு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தான் பாஜகவில் இணைந்து உள்ளார். குத்துச்சண்டையில் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற விஜேந்தர் சிங் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் விஜேந்தர் சிங் போட்டியிட்டார்.
ஆனால், தேர்தலில் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார். பிதுரி 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா 3 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும், 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட விஜேந்தர் சிங் 1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும் பெற்றனர்.
வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றுவதற்காக விஜேந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக வினோத் தாவ்டே கூறினார். மேலும் விஜேந்தர் சிங்கின் வருகை கட்சியை மேலும் பலப்படுத்தி இலக்கை நோக்கி செல்லும் என்றும் வினோத் தாவ்டே கூறினார். பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய விஜேந்தர் சிங், விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அரியானா, மேற்கு உததர பிரதேசம், ராஜஸ்தானில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் பாஜக சார்பில் விஜேந்த சிங் போட்டியிட வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா: துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி! - Maharashtra Fire Accident