டெல்லி: இன்று அதிகாலை 5.35 மணிக்கு டெல்லி - வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரகால வழி மூலம் வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானம் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால வழியாக அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் தரப்பில் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் போலீஸ் துணை கமிஷனர் உஷா ரங்னானி கூறுகையில், 'வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் "வெடிகுண்டு @5.30" என்று எழுதப்பட்ட காகிதம் குறித்து அதிகாலை 5 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து முழு பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொண்ட ஆய்வில் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், "டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் (6E2211), 176 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தபோது அதிகாலை 5.40 மணியளவில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது" என்றார்.
இதற்கிடையே, "பயணிகளை வெளியேற்றி விட்டப் பின்னர் பாதுகாப்பு நெறிமுறைகளின் படி இண்டிகோ விமானம், வங்காள விரிகுடா கடலுக்குள் வெகுதொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டது" என மற்றொரு விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல, டெல்லி விமான நிலையத்தில் மே 16ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஏஐ819 கழிவறையில் ஒரு டிஷ்யூ பேப்பரில் "வெடிகுண்டு" என்று எழுதப்பட்டிருந்ததும், அதையடுத்து அது வெறும் புரளி எனவும் பின்னர் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.