கன்னூர் : மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் மேலான ஊனமுற்றோர் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கன்னூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 70வது நம்பர் பூத்தில் போலி வாக்கு செலுத்தப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, பூத் அலுவலர் கீதா என்பவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கிர்தல்லி பகுதியில் உள்ள கே கமலாக்ஷி என்ற 86 வயது மூதாட்டிக்கு பதிலாக வி கமலாக்ஷி என்ற 82 வயது மூதாட்டியை வாக்களிக்கச் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்த மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, தேர்தல் அலுவலர் கீதா மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அருன் கே விஜயன் உத்தரவிட்டார்.
முன்னதாக, இதே கன்னூர் பகுதியில், 92 வயது மூதாட்டியின் வாக்கை சிபிஎம் தலைவர் செலுத்தியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், தேர்தல் அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளாவில் மூதாட்டியின் வாக்கை செலுத்தினாரா சிபிஎம் தலைவர்! வைரலாகும் சிசிடிவி! தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்! - Lok Sabha Election 2024