டெல்லி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்.4) எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜக 293 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காணப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றின. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா கூட்டணி பலவேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பாஜகவின் முக்கிய முழக்கங்களில் ஒன்றாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது தான் இருந்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக 63 இடங்களை இழந்தது. குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனதே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்ளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி மட்டும் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 43 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஆனால் அங்கு ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்துள்ளன.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பாஜக 63 இடங்களை கைப்பற்றியது. ஆனால் 2024 மக்களவை தேர்தலில் ஏறத்தாழ 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. இதுவே அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019ஆம் அண்டு மக்களவை தேர்தலில் 41 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, தற்போது 17 இடங்களில் மட்டுமே வென்றி கண்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 24 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக கூட்டணி வெறும் 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் கடந்த 2019 மக்களவை தேர்தலில் 39 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவது உறுதி"- சந்திரபாபு நாயுடு! - Chandrababu Naidu Press Meet