புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தலின் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், நாட்டில் கூட்டணி குறித்த பரபரப்பும் நிலவி வருகிறது. இதனிடையே இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக போட்டியிடுமா?, என்.ஆர்.காங் கட்சி போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு என்ஆர்.காங் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனக் கூறியதால் புதுச்சேரியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
இதனையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில், நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது புதுச்சேரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் இந்த சந்திப்பின் போது, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கல்யாண சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார் சுரானா, "மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாஜக தயாராகி வருகிறது . புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக உள்ளதால், இந்த தொகுதிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பேச்சு வார்த்தையே இல்லை... தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், "தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். அதனால் அவரை சந்தித்து பேசி வருகிறோம். வெகு விரைவில் வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர் அறிவிப்பார். ஏற்கனவே முதலமைச்சரை சந்தித்து பேசி உள்ளோம். மீண்டும் சந்திப்போம். தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்களை அமைப்போம் என்றார்.
மேலும், பாஜகவில் வேட்பாளர் இல்லையா? என்ற கேள்விக்கு, அதிகப்படியானோர் பாஜகவில் போட்டியிட சீட்டு கேட்கின்றனர். வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் இல்லை. நேரம் வரும் போது யார் வேட்பாளர் என கூட்டணி கட்சித் தலைவர் அதனை அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் 3 மாதங்களில் 2,931 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்!