கோத்ரா (குஜராத்): 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டை அளித்திருந்தது.
14 ஆண்டுகள் சிறை தண்டைக்குப் பிறகு, குஜராத் அரசு, கடந்த 2022 ஆகஸ்ட்டில் அவர்களின் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, 2002ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் நாடளவில் பேசு பொருளாக மாறியது.
இதனிடையே, பில்கிஸ் பானு குஜராத் அரசால் முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரின் விடுதலையை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்க, தலைமை நீதிபதி சந்திர சூட் தனிக்குழு அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி, குஜராத் அரசின் முன் விடுதலை ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: 10,000 சிசிடிவி, டிரோன் கேமராக்களுடன் உச்சக்கட்ட பாதுகாப்பு
மேலும், குஜராத் அரசின் உத்தரவு ஒருதலை பட்சமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் இரண்டு வாரத்தில் சரணடையும்படி உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் மூவர் மட்டும் சரணடையும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டி மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், மனுவை மறு பரிசீலனை செய்ய தலைமை நீதிபதியின் உத்தரவு வேண்டும் எனக் கூறி தள்ளுபடி செய்தது நீதிபதிகள் என.வி.நாகரத்னா மற்றும் சஞ்சை கரோல் தலையிலான அமர்வு.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சரணடைவதற்கான கடைசி நாள் ஜனவரி 21ஆம் தேதியாக இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு (ஜன.21), குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிளைச் சிறையில் பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நை, ஜஸ்வந்த் நை, மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜுபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 பேரும் சரணடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நித்தியானந்தா..? வர வாய்ப்புள்ளதா..?