டெல்லி: பீகாரைச் சேர்ந்த ஒருவர் தமது நான்கு மாற்றுத்திறனாளி மகள்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டெல்லி ரங்க்புரி பகுதியில் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை நேற்று (செப்.27) மீட்ட போலீசார், அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லி ரங்க்புரி பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், தங்கள் வீடுகளுக்கு அருகே ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்தனர். இதையடுத்து, போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், சந்தேகத்துக்கு உரிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு ஆண் மற்றும் நான்கு சிறுமிகள் உடல்கள் கிடந்தன.
இது குறித்து பேசிய போலீசார், "ரங்க்புரி பகுதியில் தங்கியிருந்த 50 வயது நபர் தமது மகள்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட சிறுமிகளின் தாய் புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார்.
இதையும் படிங்க: போலி ஷேர் மார்க்கெட் ஆப்.. ரூ.24 லட்சம் மோசடி.. திருப்பூர் போலீசாரிடம் இருவர் சிக்கியது எப்படி?
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர்கள் யாரும் கடிதம் எழுதி வைத்திருக்கவில்லை. எனவே, தற்கொலை குறித்து காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்று கூறினர்.
தற்கொலை ஒரு தீர்வல்ல: நீங்கள் தற்கொலை எண்ணத்துடன் இருந்தாலோ அல்லது ஒரு நண்பர் குறித்து கவலையில் இருந்தாலோ அல்லது உணர்வு பூர்வமான ஆதரவு தேவை என்றாலோ யாரோ ஒருவர் அதனை கேட்பதற்கு தயாராக இருக்கிறார். சினேகா பவுண்டேஷனுக்கு தொடர்பு கொள்ளவும்-04424640050 (24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்), டாடா அறிவியல் மையத்தின் உதவி எண்-9152987821, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.