பாட்னா (பீகார்): பீகார் மாநில சட்டப்பேரவையில் அம்மாநிலம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளை தடுக்கும் விதமாக இன்று (புதன்கிழமை) மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இது அம்மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியால் முன் மொழியப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்குள்ளான பீகார் மாநிலத்தில் இத்தகைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வினாத்தாள் கவிவு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு, 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு நடத்தும் சேவை வழங்கும் முகமைகள் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் சேவைகள் நான்கு ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த மசோதா லட்சக்கணக்கான இளைஞர்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதாக கூறிய அவர், இது போன்ற போட்டித் தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரணை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர் பதவியை விட குறைவாக இருக்கக் கூடாது எனக் கூறினார்.
பீகார் மாநிலத்தில் நடந்த பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட போட்டித் தேர்வின் வினாத்தாள்கள் கசிவுகளை நினைவு கூறும் விதமாக இருக்கலாம். ஆனால், இனி இது போன்ற முறைகேடு நடைபெறாமல் இருக்க இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மதுரையில் தான் பிறந்தீர்கள் நினைவு இருக்கா?" நாடாளுமன்றத்தில் நிர்மலாவை விளாசிய ப.சிதம்பரம்