பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மகாலட்சுமி என்ற இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒடிசாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கடந்த 21ஆம் தேதி வியாலிகாவல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் உடல் பல பாகங்களாக வெட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஏற்கனவே திருமணம் ஆன மகாலட்சுமி கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து தனியே வசித்து வந்த நிலையில் மல்லேஸ்வரத்தில் இருக்கும் ஒரு பேஷன் ஸ்டோரில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணியாற்றி வந்த முக்தி ரஞ்சன் ராய் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகிய நிலையில், முக்தி ரஞ்சன் ராய் மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகாலட்சுமி எப்போதும் போல பிற ஆண் நண்பர்களுடன் பழகிவந்த நிலையில் இதனால் அதிருப்தி அடைந்த முக்தி ரஞ்சன் ராய் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே மகாலட்சுமியை முக்தி ரஞ்சன் ராய் கொன்றிருக்கலாம் என கருதுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பட்டப்பகலில் இளம் பெண் கொலை: காதலன் தற்கொலை முயற்சி
மகாலட்சுமியை கொலை செய்த நிலையில் முக்தி ரஞ்சன் ராய் தலைமறைவாக இருந்தார். அவரை தேடி அவரது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு பெங்களூரு போலீசார் விரைந்தனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புயின்பூர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் டிசிபி சேகர் ஹெச் தெக்கண்ணவர், "ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக ஒடிசா போலீசார் தெரிவித்துள்ளனர். பத்ரக் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. முக்தி ரஞ்சன் ராய் அறையில் இருந்து டைரி, லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.