பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ஆம் தேதி நடத்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 8 நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கஃபே இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைத்து, அவர்களிடம் முறையான சோதனை நடத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இதுகுறித்து ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர் ராகவேந்திர ராவ் கூறியதாவது, "நடந்தது ஒரு துயரமான சம்பவம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு விரைவாக உணவகத்தினை திறக்க உதவிய என்ஐஏ, கூடிய விரைவில் குற்றவாளியை நாம் முன் கொண்டு வரும் என நம்புகிறேன் என்றார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு நாங்கள் எந்த நேரமும் ஒத்துழைப்பு வழங்கிட தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு பின்னணி: பெங்களூருவில் செயல்பட்டு வந்த ராமேஸ்வரம் கஃபே உணவுக் கடையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 10பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு முகமையிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து குண்டு வைத்த சந்தேகத்திகுறிய நபர் குறித்து தகவல் அளிப்பவர்கள் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பல்லாரி மாவட்டத்தில் உள்ள கவுல் பஜாரைச் சேர்ந்த துணி வியாபாரி, மற்றொருவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர் ஆவர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. அந்த வீடியேவில் சந்தேகத்திற்குரிய நபர் பேருந்தில் பயணம் செய்வது போலவும், மற்றொரு வீடியோவில் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வருவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த எட்டு நாள்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழுகையில் இருந்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த டெல்லி போலீஸ் சஸ்பெண்ட்!