டெல்லி: அஸ்ட்ரஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட பலர் உயிரிழந்ததாகவும், பலருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அஸ்ட்ரஜெனகா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிக அரிய வகையாக டிடிஎஸ் எனப்படும் ரத்த உறைதல் மற்றும், ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சேர்ந்த பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதான மற்றும் அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரத்த உறைதலை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரிலும், ஐரோப்பியாவில் வக்ஸ்செவ்ரியா என்ற பெயரில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த தடுப்பு மருந்தை ஆய்வுக்குள்ளாக்கியதில் அடிநோவைரஸ் தொற்றை தொடர்ந்து அரிய மற்றும் அதிக ஆபத்தான ரத்த உறைதலை ஏற்படுத்தக் கூடிய விஐடிடி பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலில் ரத்த தட்டுகளின் புரதத்திற்கு எதிராக எதிர்வினையாற்றக் கூடிய மற்றும் வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான ரத்த ஆன்டிபாடி காரணமாக இந்த விஐடிடி பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து அண்மையில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திருமபப் பெறுவதாக அறிவித்தது. இது கூடுதல் சர்ச்சையை கிளப்பிய நிலையில் வர்த்தக காரணங்களுக்காக தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பரவலின் போது அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது. தடுப்பூசிக்கான உரிமையை பெற்ற இந்தியாவின் சீரம் நிறுவனம் அதை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு வந்தது. மேலும், இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இந்த கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றமதி செய்யப்பட்டது.
கரோனா பரவலின் போது நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியை தவிர்த்து மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுவாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்! - Swati Maliwal Attack Issue