மேற்கு வங்கம்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே 07) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிபிஐ(எம்) மற்றும் பாஜக பூத் ஏஜெண்ட்களை நோக்கி வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிபிஐ(எம்)-யின் மேற்கு வங்க மாநிலச் செயலாளரும், முர்ஷிதாபாத் தொகுதியின் வேட்பாளருமான முகமது சமீம் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டார்.
முன்னதாக, முர்ஷிதாபாத்தில் உள்ள ஹரிஹர்பரா காவல் நிலையத்தின் பதர்கட்டா பகுதியில் வன்முறை குற்றச்சாட்டு எழுந்ததால் பதட்டமான சூழல் நிலவியது. அதேபோல், டோம்கல் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மறுபக்கம், டோம்கலில் உள்ள சாவடி எண் 254, 255இல் கட்சி முகவர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக சிபிஐ(எம்) கட்சி சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதேபோல் டோம்கல் தக்ஷின் நகர் மத்பாரா சாவடி எண் 145-ல் நுழைய விடாமல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களைத் தடுத்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மத்திய படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: ஓட்டு போட்ட பிறகு தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி! - Lok Sabha Election 3rd Phase