ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற்று மாநிலத்தின் சட்ட ஒழுங்கை ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பொது ஒழுங்கை பராமரிக்கவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படை வீரர்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வந்த பணிகள் மத்திய ரிசர்வ் படை வீரர்களிடம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் சட்டம் ஒழுங்கை மாநில காவல் துறை மற்றும் மத்திய துணை ராணுவ படைகள் மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படும் இடங்களில் மத்திய ரிசர்வ் படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் பொறுப்பேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் சிஆர்பிஎப் படையின் அதிதீவிர நடவடிக்கை குழுக்கள் மேற்கொண்டு உள்ள முயற்சிகளை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
சிஆர்பிஎப் வீரர்களுடன் இணைந்து இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவும் இணைந்து மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கூட்டாக இணைந்து படிப்படியாக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் போர் நிறுத்த மீறல்கள் என்பது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 70 என்ற அளவில் இருந்த பயங்கரவாத நடவடிக்கைகள் 2023ஆம் ஆண்டு வெறும் இரண்டாக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல்கள் 2010ஆம் ஆண்டு 489 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் கல்வீச்சு சம்பவம் 2010ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 654 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு! நீதிமன்றத்தில் காரசார வாதம்- என்ன நடந்தது? - Arvind Kejriwal Custody Extend