புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தை இன்று காலி செய்தார்.
ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்படி, அவர் தற்போது ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி- அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, எண்.5, ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள பங்களாவுக்கு குடிபெயர்கிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக மினி வேன்கள், அவர் வசித்த வீட்டிற்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவர் தலைவர், தனக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வருவதற்கு எம்பி-அசோக் மிட்டல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு குடியிருக்க வீடு இல்லை என்பதை அறிந்தேன். இதையடுத்து எனது டெல்லி இல்லத்தில் வசிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஒருவேளை கட்சியின் மற்ற நிர்வாகிகள், தலைவர்களும் அவருக்கு இதுபோன்று அழைப்பு விடுத்திருக்கலாம்.
இதையும் படிங்க: ‘கணவன் மனைவியிடம் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டால் குற்றமல்ல’ - மத்திய அரசு!
அவர் வீடு கிடைக்கும் வரை எனது வீட்டைத் தேர்ந்தெடுத்து,என்னுடனேயே இருக்க முடிவு செய்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வரவிருக்கும் டெல்லி தேர்தலில் மக்கள் எப்போதும் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் அவர் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் டெல்லி முதல்வராக வருவார்." என்றார் அசோக் மிட்டல்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதால் அவரது புதிய வீட்டை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க, அவர் எம்எல்ஏ-வாக இருக்கும் புதுடெல்லியைச் சுற்றியே வசிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். எம்எல்ஏ-க்கள், கவுன்சிலர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்கள் வீடுகளை ஆம் ஆத்மி தலைவருக்கு வழங்க முன் வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், மக்கள் மன்றத்தை சந்தித்து அதன் பின்னரே தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பேன் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி தனது முதல்வர் பதவியை டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி டெல்லி முதல்வராக பதவியேற்றார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 2025 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்