டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வை அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கக் கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் இரண்டு மனுக்களுக்கு பதிலளித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், நேற்று (ஏப்.9) இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விதிகளுக்கு முரணாதாக இல்லை என்றும், அவருக்கு எதிரான தடுப்புக் காவலை சட்டவிரோதமானது எனக் கருத முடியாது என்றும் அமலாக்கத்துறை கைதை சட்ட விதி மீறல் எனக் கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - Arvind Kejriwal Petiton Dismissed