டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதேநேரம் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட அவரது நான்கு டிஜிட்டல் சாதனங்களை ஆயுவுக்கு உட்படுத்தி இதுவரை அதில் இருந்து எந்த தரவுகளை எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து பாஸ்வேர்ட் உள்ளிட்ட ரகசிய குறியீடுகளை வழங்க நேரம் கோரி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது நீதிமன்ற காவலை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க முறையிட்டனர்.
இந்த மனுவில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, கோவா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், வழக்கு தொடர்பாக கூடுதலாக சிலரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குமூலத்தை தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, வழக்கு விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முறையாக ஒத்துழைப்பு தர மறுப்பதாக கூறினார். மேலும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தரவுகளை ஆராய பாஸ்வேர்ட்டுகளை பகிர கெஜ்ரிவால் மறுப்பதாக தெரிவித்தார்.
வழக்கு குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியும், அதே ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமலாக்கத்துறையும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்ட நிலையில், ஆனால் இதுவரை நீதிமன்றத்தால் தான் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ 31 ஆயிரம் பக்கங்களையும், அமலாக்கத்துறை 25 ஆயிரம் பக்கங்களையும் கொண்ட அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன. ஆனால் தான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்று கேட்க விரும்புவதாகவும், நான்கு பேரின் 4 விதமான வாக்குமூலங்கள் ஒரு சிட்டிங் முதலமைச்சரை கைது செய்ய போதுமானதா என்றும் கேள்வி எழுப்பினார்.
சி.அரவிந்த், ராகவ் மகுநாதா, மற்றும் அவரது தந்தை, மற்றும் சரத் ரெட்டி ஆகியோர் தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்து உள்ளதாகவும் அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடியின் காரணமாகவும், அவர்கள் நான்கு பேரும் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
தன்னை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் நீங்கள் விரும்பும் வரை தன்னை காவலில் வைத்துக் கொள்ளலாம் என்றும் விசாரணைக்கு தான் தயார் என்றும் கூறினார். மேலும், ஆம் ஆத்மி கட்சியை ஒட்டுமொத்தமாக அழிப்பதையே அமலாக்கத்துறை குறிக்கோளாக கொண்டு இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க : முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்! - Arvind Kejriwal