விஜயவாடா: ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக தலைமைச் செயலகம் நோக்கி (Chalo Secretariat) போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை வீட்டுக்காவலில் வைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்காக கட்சி அலுவகத்தில் இரவில் தங்கியுள்ளார்.
வேளைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்ககோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதுகுறித்து ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திரா காங்கிரஸ் தலைமை அலுவலகமான ஆந்திரா ரத்னா பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்து விட்டார்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவரது X பக்கத்தில், "வேலைவாய்ப்பற்றவர்களுக்கு ஆதரவாக நாங்கள் போராடினால் எங்களை வீட்டுச் சிறையில் அடைப்பீர்களா?
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? போலீசாரிடமிருந்தும், வீட்டுச் சிறையில் வைக்கப்படுவதில் இருந்தும் தப்புவதற்காக ஒரு பெண் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோத சக்திகளா?
அவர்கள் (அரசு) நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள். எங்களைத் தடுக்க முயற்சித்தாலும், எங்கள் தொண்டர்களைத் தடுக்க முயற்சித்தாலும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு ஆதரவான எங்களது போராட்டம் ஓயாது. நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் உள்ளனர்" என நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றும் அவரது X பக்கத்தில், "இரும்பு வேலிகள் போட்டு பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். வேலைவாய்ப்பற்ற மக்கள் பக்கம் நிற்கும் எங்களை கைது செய்யும் நீங்கள் சர்வாதிகாரி. உங்கள் நடவடிக்கையே அதற்கு சாட்சி. வேலைவாய்ப்பற்றவர்களிடம் ஒய்எஸ்ஆர் கட்சி (YCP) மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரசின் ஆந்திரபிரதேச பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூரும் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அவரது X பதிவில், “ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகம் ஜெகன் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது ஏன்? ஆந்திர மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராகவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதும், இளைஞர்களுக்கு ஆதரவாக நிற்பதும் பாவமா? அமைதியான போராட்டத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை?” என பதிவிட்டுள்ளார்.