விஜயவாடா: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த மூன்று நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பாதிக்கப்பட்ட 17,000 பேர் 107 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பெரு வெள்ளத்தில் 1.1 லட்சம் ஹெக்டேர் விவசாய வயல்கள் முற்றிலுமாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வம்பே காலனியைச் சேர்ந்த 31 வயதான லட்சுமி என்ற கர்ப்பிணிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆம்புலன்சும் வரவில்லை. இதனால் லட்சுமியை அவரது கணவர் இடுப்பு அளவு தண்ணீரில் நடக்க வைத்துக் கொண்டு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வருக்கு தெரிய வரவே, உடனே அவர் தனது அலுவலக ஊழியர்கள் மூலமாக ஒரு டிராக்டரை அங்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார். பின்னர், அங்கு வந்த டிராக்டரில் லட்சுமியை விஜயவாடா பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அந்த டிராக்டரில் முதல்வர் தனது அலுவலக ஊழியர்களையும் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கர்ப்பிணி உடன் முதல்வரின் செயலாளர் அடுசுமல்லி ராஜமௌலி துணையாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
சிகிச்சை பெற்றுக் கொண்ட லட்சுமியின் குடும்பம், முதல்வர் சந்திரபாடு நாயுடுவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முதல்வர், வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த நிகழ்வு ஆந்திராவில் கவனம் பெற்றுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆந்திரா, தெலங்கானா மழை வெள்ள பாதிப்பு: 1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஜூனியர் என்டிஆர்!