டெல்லி: 18வது மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலம் கோடா மக்களவை தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தனது கன்னிப் பேச்சை தொடங்கினார். அவர், "இரண்டாவது முறையாகத் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்த விரும்புகிறேன். முழு எதிர்க்கட்சி மற்றும் இந்திய கூட்டணியின் சார்பாக உங்களை வாழ்த்த விரும்புகிறேன்.
இந்த மக்களவை இந்திய மக்களின் குரலையும் உங்கள் குரலையும் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் அரசாங்கத்திற்கு அரசியல் அதிகாரம் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியும் இந்திய மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்த முறை, எதிர்க்கட்சிகள் கடந்த முறை செய்ததை விட இந்திய மக்களின் குரலை அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன" என்று தெரிவித்தார்.
மேலும், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் இடையூறுகளின்றி தொடர எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்தார். அவையில் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம் என்றும் அதேபோல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரல் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அனுமதிப்பது என்பது மிக முக்கியமானது என்றும் ராகுல் காந்தி கூறினார்.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலமும், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலமும், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புவதாகவும் மீண்டும் ஒருமுறை சபாநாயகர் மற்றும் அவையில் உள்ள அனைத்து எம்பிக்களுக்கு வாழ்த்து கூறுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி மக்களவையில் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் லல்லான் சிங்ம் ஜித்தன் ராம் மஞ்சி, அமித் ஷா, சிராக் பஸ்வான், எச்டி குமாரசாமி, ராம் மோகன் நாயுடு ஆகியோரும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்தனர்.
அதேபோல் எதிர்க்கட்சி சார்பில் கேரள எம்பி கே.சுரேஷை மக்களவை சபாநாயகர் வேட்பாளராக இந்திய கூட்டணி கட்சியினர் வழிமொழிந்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு! துணை சபாநாயகரை எதிர்க்கட்சிக்கு ஒதுக்குமா பாஜக? - Lok Sabha Speaker Om Brila