ஐதராபாத்: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி கர்நாடகா, கேரளா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மே 7ஆம் தேதி நாடு முழுவதும் 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன. சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு இன்று (மே 5) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அடுத்த இரண்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விளம்பரம், நேரடியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்களை மீறும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும், கர்நாடக மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகின்றன. ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா இன்னும் சரணடையாத நிலையில், அவரால் கர்நாடக மாநிலத்தில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் 35 இஸ்லாமியர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவர் கூட காங்கிரஸ் தரப்பில் இருந்து போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. மே 7ஆம் தேதி 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளன.
இதையும் படிங்க: "இந்தியாவை வல்லரசாக மாற்ற என் மூலம் தெய்வீக சக்தி செயல்படுகிறது"- பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024