மும்பை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று வரும் நிலையில், அதன் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த 3ஆம் கட்ட வாக்குப்பதிவானது அசாம், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், தத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ டாமன் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷாம் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா, சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சூலே ஆகியோர் வாக்கு செலுத்தினர். இதில் சரத் பவார் மகள் சுப்ரியா சூலே, அஜித் பவார் மனைவி சுனேத்ராவை எதிர்த்து பாராமதியில் போட்டியிடுகிறார்.
அஜித் பவார் தனது மனைவி சுனேத்ரா மற்றும் அவரது தாயுடன் பாராமதியின் கடேவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "இன்று எனது குடும்பத்துடன் கடேவாடி வாக்குச்சாவடியில் வாக்களித்தேன். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயகத்தின் திருவிழா. மேலும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்த, அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
சரத் பவார் பாராமதிக்கு உட்பட்ட மாலேகான் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த போது அவருக்கு ஆரத்தியுடன் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து அவர் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓட்டு போட்ட பிறகு தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி! - Lok Sabha Election 3rd Phase