புதுடெல்லி: டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு வழங்கப்பட்ட உணவுடன் தரப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து கடந்த 17ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க் பயணித்த பெண் பயணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், எங்களுக்கு வழங்கப்பட்ட உணவுடன் தரப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி கிடந்தது. இதை கண்டுபிடிப்பதற்கு முன்பே என் இரண்டு வயது குழந்தை ஆம்லெட்டில் பாதியை தின்று விட்டது. இதனால் உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பயணி ஒரு சிறிய வீடியோ மற்றும் விமானப் பயணத்தின்போது வழங்கப்பட்ட உணவின் படத்தையும் பகிர்ந்திருந்தார். மேலும் தமது எக்ஸ் பதிவில் ஏர் இந்தியா நிறுவனம், விமானப்போக்குவரத்து முறைப்படுத்தும் அமைப்பான டிஜிசிஏ மற்றும் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவையும் டேக் செய்திருந்தார்.
இதையும் படிங்க : வந்தே பாரத் ரயில் உணவில் இறந்த கரப்பான் பூச்சி.. அதிர்ந்து போன பயணி!
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவின் ஜேகேஎஃப் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்ட ஏஐ 101 விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் வெளிநாட்டு பொருள் இருப்பது தொடர்பாக ஒரு பயணி வெளியிட்ட சமூக ஊடக பதிவை காண நேர்ந்தது.
இந்த நிகழ்வில் பயணியின் அனுபவத்தை ஏர் இந்தியா நிறுவனம் உணர்ந்திருக்கிறது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் விதமாக ஏர் இந்தியாவுக்கு உணவு வழங்கிய சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வரும்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நேராவண்ணம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.சர்வதேச அளவில் விமான நிறுவனங்களுக்கு உணவு விநியோகிக்கும் மதிப்பு மிக்க உணவு வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கின்றோம்.நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை அமல்படுத்துகின்றோம். விமானப்பயணிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்,"என்று கூறியுள்ளார்.