டெல்லி: சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சென்ற ஏர் இந்தியா கேபின் க்ரூ பணியாளர்கள் லண்டனில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஹோட்டலில், ஏர் இந்தியாவின் பல்வேறு விமானங்களில் பணிபுரியும் கேபின் க்ரூ பணியாளர்களுக்கு பல அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சக பெண் பணியாளர் ஒருவர் அவரது அறையில் இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீறி அறைக்குள் நுழைந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவர் தப்பிக்க முயன்றபோது, விடாமல் தாக்கிய மர்ம நபர் அந்த பெண்ணின் கால்களை பிடித்து தரதரவென இழுத்து அறைக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மற்ற அறைகளில் தங்கியிருந்த சக பணியாளர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மர்ம நபரை பிடித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் பணியாளர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
மேலும், இதனால் மன உளைச்சலுக்கு ஆன அவருக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. பணியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக சக பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே இந்த ஹோட்டலில் இரவு நேரங்களில் வரவேற்பு அறையில் ஊழியர்கள் இருப்பதில்லை எனவும், பல முறை மர்ம நபர்கள் அறை கதவுகளை தட்டிவிட்டு செல்வதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு, மற்றும் நல்வாழ்வுக்கு ஏர் இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. ஒரு சர்வதேச அளவில் இயங்கும் ஹோட்டலில் எங்களது பணியாளர்களுக்கு நடந்த இந்த சம்பவத்தால் வேதனை அடைந்துள்ளோம்.
உள்ளூர் காவல் நிலையத்துடன் இணைந்து சட்டப்படி இந்த விஷயத்தை கையாளுவோம். இதில் சம்மந்தப்பட்ட பணியாளர்களின் தனியுரிமை பாதுக்காக்கப்பட வேண்டும். மேலும், இதுபோல சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட ஹோட்டலை கேட்டுக்கொள்கிறோம்" என இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர்: 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் கேட்கும் உள்துறை! என்ன காரணம்?