அயோத்தி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தனியார் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தர பிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு வெளியிட்டு உள்ளது.
அதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறையை அறிவித்து உள்ளன. ராமர் கோயில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் என அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
அரியானா மாநிலத்திலும் கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவை எதுவும் ஜனவரி 22ஆம் தேதி இயங்காது என அரசு அறிவித்து உள்ளது. கோவாவில் ஜனவரி 22ஆம் தேதி முழுநாள் விடுமுறையை அரசு அறிவித்து உள்ளது. அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அன்றைய தினம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், திரிபுரா மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
பாஜக ஆட்சியில் இல்லாத பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிஷா மாநிலத்திலும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்தும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் அரை நாள் மட்டும் இயங்கும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.
அஸ்ஸாம் மாநில அரசும் ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அனைது அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஜனவரி 22ஆம் தேதியன்று பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி பொது விடுமுறையை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தானில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!