டெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஜூலை 8ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூர் பயணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து வருகிறார். அண்மையில் உத்தர பிரதேசத்தில் சாமியார் போலோ பாபாவின் ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த நிலையில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், வதோதரா மற்றும் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில், வரும் ஜூலை 8ஆம் தேதி மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி அங்கு கலவரம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்திக்க உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டும் மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஏறத்தாழ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் கலவர சம்பவங்கள் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மணிப்பூர் கலவரத்தில் 221 பேர் கொல்லக்கப்பட்ட நிலையில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொந்த வீடுகளை இழந்து சொந்த ஊரிலேயே அகதிகளை போல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர், "கடந்த ஆண்டு வன்முறை வெடித்தபோது மாநிலத்திற்கு வந்த முதல் தேசிய தலைவர் ராகுல் காந்தி. மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். பிரதமர் அங்கு சென்றதில்லை. மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஜூலை 8ஆம் தேதி மீண்டும் ராகுல் காந்தி வருகையால் மணிப்பூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராகுல் மணிப்பூரில் இருந்து தனது தனது பாரத் ஜோடோ நீதி யாத்திரையை தொடங்கினர். மக்கள் பெருமளவில் வந்து அவருக்கு ஆதரவளித்து, மாநிலத்தில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே ராகுல் காந்தி மீண்டும் மணிப்பூர் வருகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரசில் இணையும் பிஆர்எஸ் எம்எல்ஏக்கள்? சந்திரசேகர ராவ் கட்சியில் என்ன நடக்கிறது? - BRS MLA Joins Congress