குவஹாத்தி (அஸ்ஸாம்): சட்டவிரோத ஐபிஎல் சூதாட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் செயலிக்கான விளம்பரத்தில் நடித்ததாக நடிகை தமன்னா மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகை தமன்னா பாட்டியாவுக்கு, அசாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து தமன்னா, தனது பெற்றோருடன் இன்று மதியம் 1:25 மணியளவில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரும், அவருடைய தந்தையும் விசாரணைக்காக அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அவருடைய தாயார் வளாகத்திற்கு வெளியே ஒரு வாகனத்தில் காத்திருந்தார். தமன்னாவிடம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது,
இன்று நடைபெற்ற விசாரணை தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பிலோ, தமன்னாவின் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் சூதாட்டச் சட்டங்களை மீறியிருக்கும் செயலிக்கான விளம்பர நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டை மையமாக வைத்து விசாரணை நடத்தப்படுகிறது என தெரிகிறது. தமன்னா போன்ற பிரபலங்களை பயன்படுத்தி, இத்தகைய தளங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாக தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, அவர் மகாராஷ்டிராவில் உள்ள அமலாக்கத் துறையால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.