ஐதராபாத்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா, மண்டி, சிம்லா, ஹமிர்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் களம் கண்டனர்.
பாஜக சார்பில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் போட்டியிட்டார். இந்நிலையில், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் 5 லட்சத்து 25 ஆயிரத்து 691 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 72 ஆயிரத்து 696 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவிடம் ஆசிர்வாதம் பெரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு புகைப்படத்தில் "அம்மாவின் ஆசிர்வாதம்" எனவும் மற்றொரு புகைப்படத்தில் "அம்மா கடவுளின் மறுவடிவம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனியார் செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், கங்கனா மண்டி தொகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை இத்தொகுதி பொருட்படுத்தவில்லை.
மண்ணின் பெருமைக்குரிய மகளாக, தனது ஜென்மபூமி (பிறந்த இடம்) இமாச்சல பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். எனவே, நான் எங்கும் செல்லமாட்டேன். வேறு யாராவது தங்கள் பைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேற வேண்டும், நான் எங்கும் செல்லவில்லை," என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மோடி மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த கங்கனா ரனவாத், முதல் முறையாக வேட்பாளராக களமிறக்கப்பட்ட நிலையில், அதில் வெற்றியும் பெற்று முதல் முறையாக மக்களவைக்கு செல்ல உள்ளார்.