ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் டவுனில் உள்ள ஷெர் காலனியில் ஒரு கடையில் இரும்பு துண்டுகள் உள்ளிட்ட ஸ்கிராப் பொருட்கள் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இவ்வாறு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நசீர் அகமது நட்ரூ (40), அசீம் அஷ்ரஃப் மிர் (20), அடில் ரஷீத் பட் (23) மற்றும் முகம்மது அசார் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஷெர் காலனியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் வல்லுநர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவினர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், தற்போதுவரை இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என சோபோர் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் திவ்யா டி கூறியுள்ளார். மேலும், ஸ்கிராப்களை ஏற்றி வந்த லாரி லடாக்கில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நவி மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்!