போபால்: ராஜஸ்தான் மாநிலத்தின் மொட்டிபுரா என்னும் கிராமத்தில் இருந்து திருமண நிகழ்விற்காக மத்தியப்பிரதேசம் நோக்கி சிலர் டிராக்டரில் வந்துள்ளனர். அப்போது, வாகனம் மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர்ஹ் மாவட்டத்தின் பிப்லோடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 15 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 13 பேர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக போபாலுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏனென்றால், இருவருக்கும் தலை மற்றும் மார்பு உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் காயம்பட்டுள்ளதாக ராஜ்கர்ஹ் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் திக்ஷித் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு பேர் படுகாயங்களுடன் ஆபத்தான சூழலில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ராஜ்கர் மாவட்டத்தின் பிப்லோடி சாலையில் நிகழ்ந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ராஜஸ்தானின் ஜஹாலவார் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வருத்தம் அடைந்தேன். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பார் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
நாங்கள் ராஜஸ்தான் அரசு மற்றும் ராஜஸ்ஹான் போலீஸ் உடன் தொடர்பில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டோ மீது கார் மோதிய கோர சம்பவம்.. ஒருவர் உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!