ஆனேகல் (பெங்களூர்): பெங்களூரில் உள்ள அத்திபெலே காவல் நிலையத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில், "தமிழகத்தைச் சேர்ந்த பவித்ரா என்னும் பெண், ஓசூரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளதாகவும், அந்த அறக்கட்டளைக்கு மத்திய அரசிடம் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பணம் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்தப் பணத்தில் இருந்து கடனாக 10 லட்சம் ரூபாய் பெற்றால், 5 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றும், மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் மானியமாக கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், அந்தக் கடனைப் பெற வேண்டுமானால், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதை அடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பணம் செலுத்தி வந்துள்ளேன். ஆனால், இதுவரை கடன் வழங்கப்படவில்லை" என புகாரில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இதேபோன்று பெங்களூரில் உள்ள அனேகல், சாந்தாபூர், சூர்யா நகர், ஹோஸ்கோட், அத்திபெலே ஆகிய இடங்களில், மத்திய அமைச்சர் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பலரும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டி ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பணம் கட்டி ஏமாற்றப்பட்ட பெண் கூறுகையில், "15 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 10 லட்சம் ரூபாய் கடன் பெறலாம் என பவித்ரா மற்றும் அவருடைய அம்மா எங்களிடம் தெரிவித்தனர். மேலும், கடனாகப் பெறப்படும் 10 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றும், மீதம் உள்ள 5 லட்சம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும் எனக் கூறினர்.
அவர்களின் வார்த்தைகளை நம்பி, என்னைப் போன்ற 30க்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.15 ஆயிரத்தை முன் பணமாக செலுத்தினோம். மேலும், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட அவர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தோம். இதற்காக 2 ஆயிரம் ரூபாய் வரை தனியாகச் செலவு செய்தோம். இதையடுத்து, பவித்ரா என்னை அவரின் வீட்டில் வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு அழைத்தார்.
அதன்படி, அவரின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு வங்கி மேலாளர் என்று ஒரு நபரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், உங்களுக்கு நாளை கடன் கிடைக்கும் என்று கூறினார். அதுதான் அவர்கள் கூறிய கடைசி வார்த்தை. இன்றும் எனக்கு பணம் கிடைக்கவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மற்றொரு பெண் கூறுகையில், "பவித்ரா எங்கள் பேக்கிங் நிறுவனத்திற்கு கூடுதல் இயந்திரம் வழங்குவதாகவும், 25 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால், ஒவ்வொருவருக்கும் ஒரு இயந்திரம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், 15 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் கடன் கிடைக்கும் என்றும், அதில் 5 லட்சம் மானியம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி அனைவரும் பணம் செலுத்தினோம். ஆனால், அதன் பிறகு பவித்ரா வெவ்வேறு காரணங்களைச் சொல்லி, பணத்தை வழங்காமல் இருந்து வந்தார். தற்போது 1 வருடம் ஆகியும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை. கடன் மட்டுமின்றி, நாங்கள் செலுத்திய பணத்தையும் பவித்ரா திருப்பித் தரவில்லை" எனக் கூறினார்.
தற்போது பவித்ரா மீது அத்திபெலே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சூர்யா நகர் போலீசார் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பவித்ராவை கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலி ஏர்வாடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!