ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டம், பண்டிட்புராவில் வசிக்கும் யதேந்திர உபாத்யாய் (16) என்ற சிறுவன், பார் பிஷன்புராவில் அமைந்துள்ள ஜோதிபா பூலே சீனியர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்த மாணவர் திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், அருகில் இருந்த பண்டிகுய் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது உடனடியாக மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து SHO பண்டிகுய் காவல்நிலைய அதிகாரி பிரேம் சந்த் கூறுகையில், "யதேந்திர உபாத்யாய் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு தான் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது பிரேதப் பரிசோதனை செய்தால் தெரிய வரும். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு சிறுவனின் குடும்பத்தார் ஒத்துழைக்கவில்லை. சிறுவன் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று உயிரிழந்துவிட்டார். சிறுவனின் இறுதிச் சடங்குகளை ஆல்வாரில் உள்ள சொந்த கிராமத்தில் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்".
இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாவன் ஜார்வால் கூறுகையில், “பள்ளியில் உள்ள ஊழியர்கள் மயங்கிய சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுவனை பரிசோதிக்கும் போது சிறுவனுக்கு இதயத்துடிப்பு இல்லை.
நாங்கள் சிறுவனுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்க முயற்சித்தோம். ஆனால், அது வீணாகிவிட்டது. அச்சிறுவன் இறந்து விட்டான். உறவினர்கள் சிறுவனுக்கு இதயக் கோளாறு இருப்பதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம்" எனவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும், சிறுவனின் குடும்பத்தினர் கூறுகையில், "சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவனுக்கு இதயம் தொடர்பான பிரச்னை இருந்தது. அதன் காரணமாக கடந்த 15 நாட்களாக ஜே.கே.லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்" என சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்! ஹத்ராஸ், மோர்பிக்கு பின் மணிப்பூர் செல்லும் ராகுல்! என்ன காரணம்? - Rahul Gandhi Manipur Visit