மணிப்பூர்: கலவரம் நிறைந்த மணிப்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) குக்கி பழங்குடியின போராளிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வு போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையேயான மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. மார்ச் 2023-இல் உயர்நீதிமன்றம் மெய்தி பழங்குடிங்களை பட்டியலின பிரிவில் சேர்க்க மணிப்பூர் மாநில அரசிற்கு பரித்துரைத்தே கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. இதன் காரணமாக வெடித்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் 18வது நாடாளுமன்ற மக்களைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்.19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது, பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், ஏப்.22ஆம் தேதி மணிப்பூர் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான மத்திய ரிசர்வு போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள நரன்சேனா பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை 2:15 மணி வரை குக்கி பழங்குடியின போராளிகள் நடத்திய தாக்குதலில் இரு மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, “மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்சேனாவில் குக்கி பழங்குடியின போராளிகள் குழு நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 இரு மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் வெடிகுண்டு தாக்குதலில் நான்கு மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவர், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வு போலீஸ் படை 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்தனர். இதற்கிடையில் மணிப்பூர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா, நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் மணிப்பூரில் அதிக வாக்குப்பதிவும், குறைந்த அளவிலான வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த அதிக அளவில் வந்தனர். ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்த சம்பவம் நடந்துள்ளது. பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. மணிப்பூரில் 75 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த முறை மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் என்ன? - Lok Sabha Election 2024