மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பட்ட ரத்த மாதிரியில் சிறுவனுக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தச் சிறுவன் மாற்றப்பட்டு, அங்கு தனி வாரிடில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். மலப்புரத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முக கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறையினர் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மலப்புரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டு வரப்பட்டு நிபா வைரஸ் மேற்கொண்டு பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்திற்கு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 1998 ஆம் ஆண்டில் மலேசியாவில் முதல் முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.
இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்றாலும், நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது.
அப்போது 17 பேர் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது மலப்புரத்தை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து! என்ன காரணம் தெரியுமா? - Elon Musk Congratulates PM Modi