டெல்லி : 2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் மக்களவை தேர்தலில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்து உள்ளார்.
மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 47 கோடியே 1 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்து உள்ளதாக தெரிவித்தார். பாலின விகிதாசாரத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் இருப்பதாகவும், இது தேர்தல் சுழற்சியில் பெண்கள் பங்கேற்பதற்கான மிகவும் ஆரோக்கியமான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.
ஏறத்தாழ 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த மாநிலங்களில் பாலின விகிதாசாரம் என்பது ஆயிரம் பெண்களுக்கு இத்தனை ஆண்கள் என கணக்கிடக் கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
மேலும், ஒரு கோடியே 89 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்குரிமை பெற்று உள்ளதாகவும், அவர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 85 புள்ளி 3 லட்சம் பெண்கள் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் இது தேர்தல்களில் பெண்களும் சமமாக பங்கேற்பதை உறுதி செய்யும் ஆரோக்கியமான அறிகுறி என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார். ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், ஆந்திராவில் மே 13ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏறத்தாழ 91 புள்ளி 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். 2024 மக்களவை தேர்தலில் ஏறத்தாழ 96 புள்ளி 8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர்.
இதையும் படிங்க: 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?