தமிழ்நாடு

tamil nadu

‘என் கக்கூஸ் கழுவகூட நீ லாயக்கில்ல’ - காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

By

Published : Mar 11, 2020, 6:35 PM IST

தூத்துக்குடி: வீட்டு பணிப்பெண்ணை சந்திக்க வந்த நபரையும், அப்பணிப் பெண்ணையும் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிய சிபிசிஐடி காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சபிதா. இவர் தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் பெரிய நாயகியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 26) என்பவர் வீட்டுவேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி அன்று வழக்கம்போல் மாரியம்மாள் வீட்டு வேலைக்கு சென்ற சமயத்தில், அவரை பார்ப்பதற்காக மாரியம்மாளின் உறவினர் சங்கர் என்பவர், சபிதாவின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அந்த சமயம் சபிதாவின் வீட்டில் யாரும் இல்லாததால், மாரியம்மாளும்- சங்கரும் வீட்டுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆய்வாளர் சபிதா, மாரியம்மாளையும்- சங்கரையும் இணைத்து தகாத சொற்களால் பேசியதாக தெரிகிறது. மேலும் ஆத்திரம் அடங்காத அவர், சங்கரை காலால் எட்டி உதைத்து அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் மனவேதனையடைந்த மாரியம்மாள், நேற்றிரவு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்‌. இதையறிந்த உறவினர்கள், மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தனது வீட்டில் வைத்திருந்த 20 பவுன் நகையை மாரியம்மாள் திருடி விட்டதாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சபிதா புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், மாரியம்மாள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டை ரத்து செய்யவும், சிபிசிஐடி ஆய்வாளர் சபிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சமூக ஆர்வலர், வழக்கறிஞர் அதிசயக்குமார் மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details