சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனி நபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்து உத்தரவு பெற்று தொடர்ந்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 542 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 740 திருக்கோயில்களில் அசையா சொத்துக்களில் ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 6324.71 ஏக்கர் வேளாண் நிலங்களும், 1,216 கிரவுண்ட் காலி மனைகளும், 187 கிரவுண்டு பரப்பிலான கட்டடங்களும், 137 கிரவுண்டு அளவிலான திருக்கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதன் சொத்துக்களின் மதிப்பு ரூ.5813.35 கோடி ஆகும்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நில விவரங்கள் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் திருக்கோயில் நிலங்களாக 4.22 லட்சம் ஏக்கர் நிலங்களும் நன்செய் நிலங்களாக 2.04 லட்சம் ஏக்கரும், புன்செய் நிலங்களாக 2.53 லட்சம் ஏக்கரும் என சுமார் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களாக அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை கொள்கை குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 22,529 கட்டிடங்களும், 75,482 மனைகளும், பிற விவசாய நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 2023 - 24 நிதியாண்டில் திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையா சொத்திலிருந்து ரூ.310.32 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பானை சின்னத்திற்கு 4 பேர் போட்டா போட்டி.. பாமக, நாதக-வுக்கு என்ன சின்னம்? - vikravandi by election