டெல்லி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இதனையடுத்து, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்துக் கட்சிகளின் எம்பிக்களும் நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்பிக்களை கொண்டுள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அத்துடன், ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில், "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சி தலைவராக செயல்படவுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
Thank you, Thiru @tvkvijayhq
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2024
Our democracy is strengthened when every Indian’s voice is heard. This is both our collective goal and duty. https://t.co/NOYGIfLqr6
இந்த நிலையில், இதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நன்றி. ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும்போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இது நமது கூட்டு இலக்கு மற்றும் கடமை ஆகிய இரண்டும் ஆகும்” என தெரிவித்துள்ளார். தற்போது, இந்தப் பதிவு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!