தமிழ்நாடு

tamil nadu

10, 11ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

By

Published : Feb 18, 2021, 7:20 PM IST

சென்னை: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை மே மாதம் இறுதியில் நடத்தவும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை பள்ளிகள் அளவில் வைத்து நடத்துவதற்கும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

கரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 2020-21ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியிலும், சில பள்ளிகளில் வாட்ஸ்ஆப் மூலமும் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினர்.

பின்னர் கரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் 2021 ஜனவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கின. அதனைத் தொடர்ந்தது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கின. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டன.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது.

இதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை பள்ளிகள் அளவில், கடந்த ஆண்டு போல் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மாணவர்களுக்கான விழிப்புணர்வு வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details